38 ஊழ்-order-method
இந்த அதிகாரத்தைப் புரிந்து கொள்ள ஊழ் என்ற வார்த்தையை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஊழ் என்பதற்குப் பல அர்த்தம் உண்டு ( விதி, பழைமை, பழவினை, தலைவிதி, பழவினைப்பயன், முறைமை,, பிரமாணம் )
இதில் ஊழ் என்பதற்கு விதி, வல்வினை, வினைப்பயன் என்று அர்த்தம் எடுப்பவர்கள் அனேகர், ஆனால் முறைமை அல்லது பிரமாணம் என்ற அர்த்தமே சரியானதாக அமையும்.
விதி என்ற முறை பொதுவாக ஒரு திட்டவட்டமான, நிறுவப்பட்ட, தர்க்கரீதியான அல்லது முறையான திட்டத்தின் படி, ஒரு தீர்க்கப்பட்ட செயல்முறையைக் குறிக்கிறது. அதாவது ஒரு செயல் செய்யப்படுவதற்குக் கொடுக்கப்படும் விதிமுறை கோட்பாடு ( rule and method ) ஆகும். இந்த விதிமுறை மனிதனின் வாழ்க்கைக்கும் உண்டு, மற்றும் எல்லாச் செயல்களுக்கும் உண்டு, உதாரணமாக கெப்லரின் மூன்று விதிகள் கிரகங்கள் எவ்வாறு சூரியனைச் சுற்றி வருகின்றன என்பதை விவரிக்கிறது The Kepler's three laws describe how planetary bodies orbit the Sun, ) விதிமுறை என்பது ஒரு மனிதனுக்குத் தெய்வத்தால் விதிக்கப்பட்ட விதி ( Fate) என்றும் அது பழவினைப்பயன் என்றும் அல்ல.
விதியை மதியால் வெல்லலாம்
விதியை மதியால் வெல்லலாம் என்றால், இறைவனால் விதிக்கப்பட்ட வாழ்க்கை முறைமையை நம்முடைய பக்தி மற்றும் ஒழுகத்தின் செயல்களினால் மாற்றாலாம் என்பதாகும்.
தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்படும் வாழ்க்கை முறைமையை விதி என்று கூறுகிறோம். அந்த மனிதன் தனக்குக் கொடுக்கப்பட்ட விதிக் கோட்பாட்டைத் தெய்வத்தை வணங்குவதினாலும், துதிப்பதினாலும், மாற்றி அமைக்க முடியும், அதையே தெய்வத்தின் கிருபை என்று கூறுகிறோம். இதனால் தான் விதியை மதியால் வெல்ல முடியும் என்று கூறுவார்கள்
முயற்சி திருவினையாக்கும்
திருவள்ளுவர் தனது 616வது குறளில் திருவினை என்ற வார்த்தையை உபயோகப் படுத்தியுள்ளார். திருவினை என்பது நல்ல காரியங்களைக் குறிக்கிறது. திருவினை என்னும் பதம் நல்ல காரியங்களைக் குறிக்குமானால் ஊழ் என்ற வினை விதிக்கப்பட்ட முறைமைகளையே குறிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அது தலை விதி. என்பதைக் குறிக்க வில்லை
உதாரணம்
ஒரு ஏழை வீட்டில் பிறக்கும் ஒரு பிள்ளை ஏழையாகவே வாழ்ந்து வந்தால் அதை வினை என்று அழைக்கிறோம் அல்லது இறைவனால் விதிக்கப்பட்ட விதிமுறைமை என்று அழைக்கிறோம். இந்த விசயத்தை ஆராய்ந்து பார்த்தால் அவன் ஏழையாகவே பிறந்து ஏழையாகவே மரிக்க வேண்டும் என்பது விதியாகும். இதை விதி என்று எடுத்தால் அதை அவன் நினைத்தாலும் மாற்ற முடியாது என்பதே ஆகும். ஆனால் தெய்வத்தின் அருளால் அவன் வாழ்க்கையில் முன்னேற முயற்சி எடுக்கும் போது அவனுக்கு அந்த ஏழ்மை நிலைமை மாறி அவன் வாழ்வு வளம் பெருகுகிறது. அது திருவினையாகும்.
குறள் 616: kural 616
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
சொற்பொருள்
முயற்சி = ஒரு மனிதன் எந்த ஒரு காரியத்தையும் செய்யத் தெய்வத்தின் அருளோடு முயற்சி எடுத்தால் அந்த முயற்சியானது அவனுக்கு
திருவினை ஆக்கும் = நல்ல காரியங்களைக் கொண்டு வந்து சேர்க்கும்
முயற்றின்மை = ஒரு மனிதன் எந்த ஒரு காரியத்தையும் தெய்வத்தின் அருளோடு முயற்சி செய்து பார்க்காத தன்மையுடன் இருந்தால்
இன்மை புகுத்தி விடும் = அவனுக்கு அந்த முயற்சி இன்மை, அவன் வாழ்வில் வறுமையைக் கொண்டு வந்து சேர்க்கும்.
விளக்கம்
ஒரு மனிதன் எந்த ஒரு காரியத்தையும் செய்யத் தெய்வத்தின் அருளோடு முயற்சி எடுத்தால் அந்த முயற்சியானது அவனுக்கு நல்ல காரியங்களைக் கொண்டு வந்து சேர்க்கும். ஒரு மனிதன் எந்த ஒரு காரியத்தையும் தெய்வத்தின் அருளோடு முயற்சி செய்து பார்க்காத தன்மையுடன் இருந்தால் அவனுக்கு அந்த முயற்சி இன்மை, அவன் வாழ்வில் வறுமையைக் கொண்டு வந்து சேர்க்கும்.
பரிசுத்த வேதாகமம்
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். ஏசாயா 40:31
கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். நீதி 10:22
குறள் 371: kural 371
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்று மடி
சொற்பொருள்
ஆகூழால் = ஆகும் ஊழால் = ஒருவனுக்குப் பிறக்கும் போதே வரும் விதி முறைமையை வெல்ல
தோன்றும் அசைவின்மை = அவனுக்குள் உண்டாகும் முயற்சி என்பது
கைப்பொருள் = அவன் கையில் உள்ள ஒரு கருவி அல்லது ஆயுதம் ஆகும்
போகூழால் = அப்படி அவன் எடுக்கும் முயற்சியினால் முடிவடையும் அல்லது விலகும் விதி முறைமையால்
தோன்று மடி = உண்டாகும் தீட்டில்லா நிலை அல்லது தீயவை இல்லா நிலை
விளக்கம்
மனிதனுக்கு அவன் பிறக்கும் போதே வாழ வேண்டிய முறைமை தெய்வத்தால் வகுக்கப்படுகிறது அதையே நாம் விதி என்று அழைக்கிறோம், அந்த விதிக்கப்பட்ட முறைமை இறைவனை நம்பி வாழ்ந்து முயற்சி செய்யும் போது அது மாற்றப்படுகிறது, அதுவே முயற்சியாகும். அதையே திருவள்ளுவர் தனது 616வது குறளில் முயற்சி திருவினையாக்கும் என்று குறிப்பிடுகிறார்.
குறள் விளக்கம்
ஒருவனுக்குப் பிறக்கும் போதே வரும் விதி முறைமையை வெல்ல அவனுக்குள் உண்டாகும் தெய்வத்தோடு கூடிய முயற்சி என்பது அவன் கையில் உள்ள ஒரு கருவி அல்லது ஆயுதம் ஆகும். அப்படி அவன் எடுக்கும் முயற்சியினால் அவன் வாழ்வில் விதியினால் உண்டாகும் காரியங்கள் முடிவுக்கு வரும். அல்லது விலகும். அப்படி அந்த விதிக்கப்பட்ட முறைமை விலகும் போது அவனுடைய வாழ்வில் தீட்டில்லா நிலை அல்லது தீயவை இல்லா நிலைமை உருவாகும்.
பரிசுத்த வேதாகமம்
உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டுபண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது! சங்கீதம் 31:19
அசைவின்மை : முயற்சி
மடி : சோம்பல் சோம்பலுடையவன் நோய் மீன்வலையோடு சேர்ந்த பெரும்பை கேடு பகை பொய் தீநாற்றம் ஆடைவகை தீட்டில்லா நிலை இரட்டைக் கட்டுமரம் சோறு தாழை தாழைவிழுது மடங்கு
குறள் 372: kural 372
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூ ழுற்றக் கடை
சொற்பொருள்
பேதைப் படுக்கும் = அறியாமை உண்டாகும்
இழவு ஊழ் அறிவகற்றும் = வாழ்க்கையை இழக்கச் செய்யும் வறுமை போன்ற தெய்வத்தால் விதிக்கப்பட்ட முறைமை ஒரு மனிதனின் ஆத்துமாவைத் தெய்வத்தை விட்டு விலகச் செய்யும்.
ஆக ஊலூம் = ஒருவனுக்குப் பிறக்கும் போதே வரும் முழுமையான விதி முறைமையினால்
உற்றக் கடை = அவன் அடைய வேண்டிய இடமாகிய நல்ல இடமாகிய பரலோகம் கிடைக்கும்
விளக்கம்
ஒருவனுக்கு வாழ்க்கையை இழக்கச் செய்யும் வறுமை போன்ற விதி முறைமை தெய்வத்தால் விதிக்கப்பட்டு இருக்கும் என்றால் அந்த விதி முறமை அவனுடைய உள்ளத்தில் அறியாமையை உண்டாக்கி அவனுடைய ஆத்துமாவைத் தெய்வத்தை விட்டு விலகச் செய்யும். அதே போல ஒருவனுக்குப் பிறக்கும் போதே வரும் ஒரு நல்ல விதி முறைமையினால் அவன் அடைய வேண்டிய நல்ல இடமாகிய பரலோகம் கிடைக்கும்.
இந்த குறளுக்கு கலைஞர் அவர்கள் எழுதிய உரை ஒத்துப் போகிறது, அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் ஆனதனால் தெய்வத்தோடு சம்பந்தப்பட்ட விதி முறைமை என்பதை இயற்கை எனக் குறிப்பிடுகிறார்.
அழிவு தரும் விதி முறைமை அறியாமையை உண்டாக்கி ஆத்துமாவை அழிக்கும், ஆக்கம் (பிறப்பு) தரும் விதி முறைமை அதற்கேற்ப நல்ல இடத்தைக் கொடுக்கும்
கலைஞர் உரை:
அழிவு தரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்
பரிசுத்த வேதாகமம்
என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது. சங்கீதம் 94:19
பேதை : அறியாமை
படுக்கும் : ஆக்கும் உண்டாக்கும் உளதாக்கும்
இழவு : இழப்பு கேடு சாவு எச்சில் வறுமை
அறிவு : ஞானம் புத்தி பொறியுணர்வு அறிய வேண்டியவை கல்வி ஆன்மா
கடை- (1) : இடம்
குறள் 373: kural 373
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்
சொற்பொருள்
நுண்ணிய = அறிவு தரக்கூடிய நுட்பமான
நூல்பல கற்பினும் = புத்தகங்கள் பல படித்தறிந்தாலும்
மற்று உந்தன் = மற்றபடி அவனுடைய உள்ளத்தில் உண்டாகும்
உண்மை யறிவே மிகும் = சத்தியமாகிய இறைவனைப் பற்றிய மெய் உணர்வு மட்டுமே மேலோங்கி நிற்கும்.
விளக்கம்
ஒருவன் அறிவு தரக்கூடிய பல நுட்பமான புத்தகங்களைப் படித்தறிந்தாலும், அவனுக்குள் உலக ஞானம் மட்டுமே உண்டாகும். அவனுக்கு எவ்வளவு தான் உலக அறிவு உண்டானாலும், அது அவனுடைய ஆத்துமாவுக்கு உதவாது. அதனால் அவன் உள்ளத்தில் எழும்பும் மெய் உணர்வு மட்டுமே அவனுடைய வாழ்வில் மேலோங்கி நிற்கும் அதாவது அவனுடைய உள்ளத்தில் உண்டாகும் சத்தியமாகிய இறைவனைப் பற்றிய அறிவே மேலோங்கி நின்று அவனை உற்ற இடமாகிய பரலோகம் கொண்டு சேர்க்கும்..
பரிசுத்த வேதாகமம்
ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். நீதி 2:3-6
குறள் 374: kural 374
இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு
சொற்பொருள்
இரு வேறு உலகத்து = இரண்டு வெவ்வேறு உலகங்களாகிய பூலோகமும், வானுலகமும் அதாவது பூமியும், வானமாகிய பரலோகமும்
இயற்கை = தெய்வத்தால் படைக்கப்பட்ட தன்மை என்பது
திருவேறு = சிறப்பான பெருமை நிறைந்த வேற்றுமை கொண்டது
தெள்ளியர் = இதைப் பற்றி அறிந்தவர்கள் தெளிந்த அறிவுடையவர்கள் ஆவார்கள்
ஆதலும் வேறு = அப்படித் தெளிந்த அறிவுடையவர்கள் ஆகுதல் அவர்களுக்குத் தனிச்சிறப்பு ஆகும்
விளக்கம்
தெய்வத்தின் விதிக்கப்பட்ட பிரமாணத்தின் படைக்கப்பட்ட இரண்டு வெவ்வேறு உலகங்களாகிய பூலோகமும், வானுலகமும் அதாவது பூமியும், வானமாகிய பரலோகமும் ஆகும். அப்படித் தெய்வத்தால் படைக்கப்பட்ட தன்மை என்பது சிறப்பான பெருமை நிறைந்த வேற்றுமை கொண்டது.
அப்படி அந்தப் படைப்பின் பெருமையைப் பற்றி அறிந்தவர்கள் தெளிந்த அறிவுடையவர்கள் ஆவார்கள், அப்படித் தெளிந்த அறிவுடையவர்கள் ஆகுதல் அவர்களுக்குத் தனிச்சிறப்பு ஆகும்
பரிசுத்த வேதாகமம்
நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷர்களைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன். ஏசாயா 45:12
உலகம் : உலகு உலகப்பொது பூமி நிலப்பகுதி உலகுயிர்கள் திக்கு மக்கள்தொகுதி உலகிலுள்ள உயர்ந்தோர் ஒழுக்கம் உயர்ந்தோர் உயர்குணம் வானம்
இயற்கை : தன்மை
வேறு : தனிச்சிறப்பு
வேறு : மாறுபாடு
குறள் 375: kural 375
நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு
சொற்பொருள்
செல்வம் செயற்கு = தெய்வத்தைத் தேடாமல் செல்வத்தை மட்டும் உண்டு பண்ணுகிறவர்களுக்கு அல்லது பணத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்களுக்கு
நல்லவை எல்லாம் தீயவாம் = நல்லவையாகத் தெரியும் காரியம் தீமையிலே முடிவடையும்
தீயவும் நல்லவாஞ் = தெய்வத்தை நம்பி வாழும் ஒருவனுக்கு வரும் தீமையான காரியங்கள் தெய்வத்தின் அருளால் நல்லவையாக முடிவடையும்.
தெய்வத்தை நம்பி வாழ்வது ஊழ் வினையை மாற்றும்.
விளக்கம்
ஒருவன் தெய்வத்தைத் தேடாமல் செல்வத்தை மட்டும் உண்டு பண்ணு00கிறவனாய் இருந்தால் அல்லது பணத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றவனாக இருந்தால் அவனுக்கு வரும் நல்லவையாகத் தெரியும் காரியம் தீமையிலே முடிவடையும்.
தெய்வத்தை நம்பி வாழும் ஒருவனுக்கு வரும் தீமையான காரியங்கள் தெய்வத்தின் அருளால் நல்லவையாக முடிவடையும். தெய்வத்தை நம்பி வாழ்வது ஊழ் வினையை மாற்றும்.
பரிசுத்த வேதாகமம்
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு (தெய்வத்தை விட்டு ) வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். 1 கொரி 6:10
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். யோவான் 16:20
குறள் 376: kural 376
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம
சொற்பொருள்
பரியினும் = ( பரி = வருத்தம் ) வருந்திப் பாதுகாத்து வைத்தாலும் செல்வம்
ஆகாவாம் = ஆகாமற் போகலாம்
பாலல்ல = பங்கு போட்டுக் கொடுத்தாலும்
உய்த்துச் சொரியினும் = கொண்டு போய் கொட்டினாலும்
போகா தம = செல்வம் நமக்குக் குறைந்து போகாமல் இருக்கும்
விளக்கம்
ஒருவன் தன் வாழ்நாள் எல்லாம் செல்வத்தை வருந்திச் சம்பாதித்து தெய்வத்தின் திட்டத்தை உணராமல் அந்தச் செல்வத்தைப் பாதுகாத்து வைத்தான் என்றால், அந்தச் செல்வம் அவனுக்கு ஆகாமற் போகலாம், அல்லது செலவாகிப் போகலாம்.
அதே நேரத்தில் ஒருவன் தன்னுடைய செல்வத்தைத் தெய்வத்தின் திட்டத்தின் படி சிலருக்குப் பங்கு போட்டுக் கொடுத்தும், மற்றும் சிலருக்குக் கொண்டு போய் கொட்டிக் கொடுத்தாலும், அந்தச் செல்வம் அவனுக்குக் குறைந்து போகாமல் இருக்கும். அதையே “இறைக்கிற கிணறு தான் ஊறும்” என்று சொல்லுவார்கள்.
பரிசுத்த வேதாகமம்
வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.. உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். நீதி 11{24-25
கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார். லூக்கா 6:38
பால் : வெண்மை சாறு பகுதி பிரித்துக்கொடுக்கை பாதி பக்கம் வரிசை குலம் திக்கு குடம் குணம்
உய்த்து : கொண்டு போய்
குறள் 377: kural 377
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது
சொற்பொருள்
வகுத்தான் வகுத்த வகை அல்லாற் = படைத்த இறைவனின் கிருபையைப் பெறாமலும், அவர் படைத்த நோக்கத்தை அறியாமலும் ஒருவன்
கோடி = கோடி கோடியாய் செல்வம்
தொகுத்தார்க்கும் = சம்பாதித்தவர்களுக்கும்
துய்த்தல் அரிது = அனுபவித்தல் உண்டாகாது
விளக்கம்
படைத்த இறைவனின் கிருபையைப் பெறாமலும், அவர் படைத்த நோக்கத்தை அறியாமலும் ஒருவன் கோடி கோடியாய் செல்வத்தைச் சம்பாதித்தது வைத்திருந்தாலும் அவனுக்குத் தெய்வத்தின் கிருபை இருந்தால் மட்டுமே அவனால் அந்தச் செல்வத்தை அனுபவிக்க முடியும்.
பரிசுத்த வேதாகமம்
அதாவது, ஒருவனுக்குத் தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியைத் தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும் மாயையும் கொடிய நோயுமானது. பிரசங்கி 6:2
பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப் பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார். லூக்கா 12:19-21
குறள் 378: kural 378
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்
சொற்பொருள்
துறப்பார் மன் = ( மன் = நிலைபேறு ) ஒருவன் இந்த உலகத்தில் எல்லாவற்றையும் விட்டு விட்டு தெய்வத்தையே நம்பி வாழும் துறவு வாழ்க்கை வாழ்ந்தால் அவனுக்கு வீடுபேறு கிடைக்கும்.. அப்படிப் பட்டவர்களுக்கு
துப்புரவில்லார் = உள்ளத்தில் பரிசுத்தம் அல்லது தூய்மை இல்லாமல் வாழ்பவர்களுக்கு
உறற்பால = வரக்கூடியவை ஆகிய காமம், பொய் போன்றவை
ஊட்டா = வந்து சேராமல்
கழியும் எனின் = கடந்து போகும் என்று சொல்லலாம்
விளக்கம்
ஒருவன் இந்த உலகத்தில் எல்லாவற்றையும் விட்டு விட்டு தெய்வத்தையே நம்பி வாழும் துறவு வாழ்க்கை வாழ்ந்தால் அவனுக்கு வீடுபேறு கிடைக்கும்.. அப்படிப் பட்டவர்களுக்கு வரும் நன்மை என்னவென்றால், உள்ளத்தில் பரிசுத்தம் அல்லது தூய்மை இல்லாமல் வாழ்பவர்களுக்கு வரக்கூடியவை ஆகிய காமம், பொய், மயக்கம் போன்றவை, துறவு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு வந்து சேராமல் கடந்து போகும் என்று சொல்லலாம்
பரிசுத்த வேதாகமம்
என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; மத்தேயு 19:29
மன் : ஆக்கம் மிகுதி மன்னன் நிலைபேறு
குறள் 379: kural 379
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்
சொற்பொருள்
நன்று ஆங்கால் = நல்லது அல்லது சிறப்பானது வரும் போது
நல்ல வாக்காண்பவர் = நல்லவையாகவே கண்டு மகிழ்பவர்கள்
அன்று ஆங்கால் = மாறுபாடு ஆகிய துன்பங்கள் வரும் போது
அல்லற் படுவது எவன் = எதனால் துன்பப்படுவது ஏன் ?
விளக்கம்
ஒருவன் வாழ்வில் தெய்வம் அனுமதிக்கும் நல்லவை அல்லது சிறப்பான காரியங்கள் வரும் போது நல்லவையாகவே கண்டு மகிழ்கிறான், அதற்கு மாறுபட்டு தெய்வத்தால் துன்பமான காரியங்கள் அனுமதிக்கப் பட்டு அவைகள் வரும் போது துன்பப்படுகிறான். தெய்வம் இரண்டையுமே அனுமதிக்கிறார் என்பதை உணர்ந்து அவன் அமைதியாய் இருப்பதையே தெய்வம் விரும்புகிறார்.
இந்த அர்த்தத்தைக் கீழே உள்ள வசனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.
பரிசுத்த வேதாகமம்
வாழ்வுகாலத்தில் நன்மையை அநுபவித்திரு, தாழ்வுகாலத்தில் சிந்தனைசெய்; மனுஷன் தனக்குப்பின் வருவதொன்றையும் கண்டுபிடியாதபடிக்கு தேவன் இவ்விரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார். பிரசங்கி 7:14
அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை. யோபு 2:10
குறள் 380: kural 380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
சொற்பொருள்
ஊழிற் = தெய்வத்தால் விதிக்கப்பட்ட பிரமாணம்
பெருவலி யாவுள = ஒரு மனிதனுக்கு வரும் பெரிய வலிமையான காரியம் ஆகும், அதை விடப் பெரிய காரியம் வேறு இல்லை
மற்றொன்று = அப்படித் தெய்வம் வகுத்த பிரமாணம் இல்லாமல் வேறு காரியம்
சூழினும் = அவன் வாழ்வில் சூழ்ந்து வந்தாலும்
தான் முந்துறும் = தெய்வம் விதித்த பிரமாணமே முந்தி அவனுக்கு வந்து நடக்கும்
விளக்கம்
விதியை மதியால் வெல்லலாம் என்ற வார்த்தையின் படி, நமக்கு விதிக்கப்பட்ட பிரமாணத்தை தெய்வத்தை வணங்கி துதித்து வாழும் போது, அந்த பிரமாணத்தை தெய்வம் மாற்றக் கூடியவர் ஆவார்.
அப்படித் தெய்வத்தைப் பற்றிக் கொள்ளாமல் வாழும் ஒருவனுக்குத் தெய்வத்தால் விதிக்கப்பட்ட பிரமாணம் அவனுக்கு வரும் பெரிய வலிமையான சுய பெலத்தினால் மாற்றமுடியாத காரியம் ஆகும், அதை விடப் பெரிய காரியம் வேறு இல்லை. அப்படி தெய்வம் வகுத்த பிரமாணம் இல்லாமல் வேறு காரியம் அவன் வாழ்வில் சூழ்ந்து வந்தாலும் தெய்வம் விதித்த பிரமாணமே முந்தி அவனுக்கு வந்து நடக்கும்.
பரிசுத்த வேதாகமம்
பிரமாணத்தின் படி
நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது. எனக்குச் சுகமுமில்லை, இளைப்பாறுதலுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது யோபு 3:25-26.
தெய்வத்தின் மேல் நம்பிக்கை
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். சங்கீதம் 37:5
துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். நீதி 10:24
guru