top of page

 தவம் --- தவத்திற் குரு யார் ?

 

”அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தை பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்."

உள்ளே

1) தவம் என்றால் என்ன ? 2)தவத்திற் குரு யார் ? 3) அகத்தியர் கூறும் தவம் என்ன ?    4) நாலடியார் பாடல் 31 5) தாயின் தவம் என்ன ? 6) தவத்தால் உண்டான தவம் என்ன ? 7) குறள் 261- உற்றநோய் நோன்றல், குறள் 262- தவமுந் தவமுடையார், குறள் 263- துறந்தார்க்குத் துப்புரவு, குறள் 264- ஒன்னார்த் தெறலும், குறள் 265- வேண்டிய வேண்டியாங், குறள் 266- தவஞ்செய்வார் தங்கருமஞ், குறள் 267- சுடச்சுடரும், குறள் 268- தன்னுயிர் தானறப், குறள் 269- கூற்றங் குதித்தலுங், குறள் 270- இலர்பல ராகி. 8) திருக்குறள் அதிகாரம் 27--தவம்

தவம் என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். தவம் என்பது அமர்ந்து தியான நிலையில் இருப்பது என்று தவறாக அர்த்தம் எடுக்கப்பட்டுள்ளது. தவம் என்பது அமர்ந்த நிலையில் தியானம் செய்வது தவம் அல்ல. தன்னுயிர் ஈந்து பிற உயிர் காப்பதுவே தவம் ஆகும்.

சிவயோகி சிவக்குமார் தனது அதிகார விளக்கத்தில் ( திருக்குறள் 261ல்) தவத்தைத் தனது துன்பத்தை நீக்கி  அடுத்தவர் துன்பத்தை ஒழிப்பதே தவம். என்று விளக்கம் கூறுகிறார் சிவயோகி சிவக்குமார் அவர்கள்:

https://www.ytamizh.com/thirukural/kural-261/

ஒருவன் தனது துன்பத்தை நீக்கினபிறகு அடுத்தவர்களது துன்பத்தை நீக்குவது என்பது முடியாத காரியம். ஏன் என்றால் மனிதனுக்கு வரும் துன்பங்கள் அனேகம் அவனுடைய மரண நாள் வரை அந்த துன்பம் அவனை பின் தொடரும். எனவே தனக்கு வரும் துன்பத்தை பொறுத்துக்கொண்டு அடுத்தவர் துன்பத்தை ஒழிப்பதே தவம் ஆகும்.

தவத்திற் குரு

பிற மனித உயிர்கள் நித்திய வாழ்வை அடைவத்ற்க்காக பரிகார பலியாகி தன்னுயிரை ஈந்த தெய்வமே தவத்திற் குரு ஆவார்.

தெய்வம் நமக்காக பலி பொருளானதைத் திருவள்ளுவர் அறன் வலியுறுத்தல் பகுதியில் உள்ள 10 குறளிலும் தெளிவு படுத்தியுள்ளார்.

அறன் வலியுறுத்தல் என்பது உயிர்ப்பலியாகிய தெய்வத்தை (முதல்வனை) வலியுறுத்தும் பகுதி அறன் என்றால் வேள்வி முதல்வன் அல்லது உயிர்ப்பலிக்குரியவன் ( one who sacrifice ) என அர்த்தம், அல்லது புனிதமான வேலையைச் செய்து முடித்தல் எனப்பொருள்படும் (Performing a sacred duty)

 

அகத்தியர் கூறும் தவம்

அகத்தியர் தனது அகத்தியர் ஞானம்  30 ல் 23 வது பாடலில் தெய்வம் தனது தவத்தைக் காட்டி அன்பான சீசர்களை ( சித்தர்கள் ) இந்த உலகத்தில் விட்டு விட்டு, தான் உயித்தெழுந்து அகண்ட தலம் ( heavan ) சென்ற தெய்வத்தை குரு எனக் குறிப்பிடுகிறார். இந்த இடத்தில் அகத்தியர் அவர்கள்  தவத்தைக் காட்டி என்பதைத் தெய்வம் இரத்தத்தைச் சிலுவையில் சிந்தியதையே தவம் என்று குறிப்பிடுகிறார்.

 

அகத்தியர் ஞானம்  30 ல் 23 வது பாடல்

வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகி
மானிலத்தை ஒரு நொடியில் வகுத்தே மண்ணில்
குணமான மனிதரையும் படைத்த பின் 
குவலயத்திற்றானு தித்துக்குருவாய் வந்து
கனமான சமுசாரம் ஒன்றிலாமல்
சன்யாசி போலிருந்து தவத்தைக்காட்டி
அன்பான சித்தர்களை இருத்திப்போட்டு
அகண்டதலஞ்சென்றவரை யண்டுவாயே

 

நாலடியார் கூறும் தவம்                                                               

நாலடியார் 4ம் அதிகாரம் 31வது படலில் ஆசிரியர் தவத்தால் தவம் செய்யாதவர்க்கு என்ன நேரிடும் என்று கூறுகிறார்.

நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்

 

பாடல்: 31 (அகத்தாரே)

அகத்தாரே வாழ்வாரென் றண்ணாந்து நோக்கிப்| 

புகத்தாம் பெறாஅர் புறங்கடை - பற்றி

மிகத்தாம் வருந்தி யிருப்பரே மேலைத்| 

தவத்தாற் றவஞ்செய்யா தார். (01

 

இந்த பாடலுக்கு விளக்கம் கொடுக்கும் போது பலர் "முற்பிறவியில் தவம் செய்யாதவர்களது தவம்" எனத் தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் தவறு என்றால் திருவள்ளுவர்  எழு பிறவி எனக் குறிப்பிடுகிறார். பின் பிறக்கும் சந்ததியே எழு பிறவி ஆகும். ( அதாவது  பின் எழும்பும் சந்ததி )

 

தெய்வம் செய்த தவத்தை பின் பற்றி தவம் செய்யாதவர்கள், இந்த பூலோக வாழ்வே இன்பம் என்று கருதி உயர்ந்தோங்கி நிற்கும் ஒரு வீட்டை அண்ணாந்து பார்த்து (இறைவன் ஏற்படுத்தி இருக்கும் பரலோக வீட்டை) அதற்கு உள்ளே போக முடியாதவர்களாகி தலை வாயிலைப் பிடித்துக் கொண்டு மிக வருந்தியிருப்பர்.

பரிசுத்த வேதாகமம் ( யோவான் 14:2-3  )

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

 

தாயின் தவம் என்ன ?

தவம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை அறிய வேண்டும் என்றால் தாயின் தவத்தைப் பார்க்கவேண்டும். நமது தமிழ் நாட்டில் தாய்மார்கள் தங்களது பிள்ளைகளைக் கொஞ்சும் போது தவம் இருந்து பெற்ற பிள்ளைகள் எனக் கூறுவதை நாம் அறிவோம். தாயின் தவம் என்பது தியானம் இருந்து பிள்ளை பெற்றது கிடையாது. ஒரு தாய் தனது பிள்ளையை இரத்ததில் பெற்று எடுக்கிறாள். அதாவது தனது இரத்ததை சிந்தி ஒரு உயிரைப் பெற்று எடுக்கிறாள்.

தாய் என்பவள் தன்னுயிரைக் கொடுத்து பிள்ளையின் உயிரைக் காப்பாற்றுகிறாள், அதனால் தான் பிள்ளைப் பேறு காலத்தைப் பிரசவ காலம் என அழைக்கிறோம்.  மருத்துவத் துறையில் பல கண்டு பிடிப்புகள் இல்லாத சமயத்தில் பிரசவ காலத்தில் இரு உயிர்களையும் காப்பாற்றுவது கடினமான காரியம் எனவே தான் ஒரு பிறவி மற்றும் ஒரு சாவு என்பதைச் சுருக்கி பிரசவம் என் அழைத்தார்கள்.

எனவே தன் உயிரைத் தந்து  வேறு ஒரு உயிரைக் காப்பதுவே தவம் ஆகும்.

தெய்வம் செய்த தவம் என்ன ?

தெய்வம் இந்த பூமிக்கு வந்து மனிதானாகப் பிறந்து  சிலுவையிலே இரத்தம் சிந்தி  மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து பரலோகத்தைத் திறந்து மனிதனுக்குப் பரலோகம் செல்ல வழி உண்டாக்கினார். அவருடைய  சிலுவை இரத்தத்தினால் பாவ மன்னிப்பு உண்டானது..

கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதன் பாவம் செய்து கடவுளை விட்டு பிரிந்து போனான். கடவுளைப் பிரிந்ததால் மனுக்குலத்திற்குப் பல இன்னல்கள் வந்து சேர்ந்தது. குறிப்பாகப் பாவம் மனிதனை நரகத்திற்கு இழுத்துச் செல்கிறது. கடவுள் மனிதனை நேசித்தால் மீண்டும் மனிதனை தன்னோடு இணைத்துக் கொள்ள உண்டான கடவுளின் திட்டமே தன்னுடைய சொந்த மகனான இயேசுவின் சிலுவை மரணம்.

திருவள்ளுவர் கூரும் தவத்திற் குரு யார் ?

தவம்  என்ற அதிகாரம் திருக்குறளில் 27வது அதிகாரமாக உள்ளது, இதில் உள்ள 10 பாடல்கள் அனைத்தும் தவத்தில் குருவாகிய தெய்வத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது

திருவள்ளுவர் தனது 261வது குறளில் தவத்திற் குருவைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

மனிதர்களின் தவம் என்ன ?

 இப்படிப் பட்ட வழியை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது நம் மேல் விழுந்த கடமை ஆகும். அதனால் ஏற்படும் துன்பங்களையும்  தாங்கிக் கொண்டு  தன் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்றி அவர் மனிதக்குலத்துக்காகப் பட்ட  பாடுகளைப்போலப் பாடுகள் பட்டு அவர் பின் செல்வதே மனிதர்கள் செய்யும் தவம் ஆகும்..
பரிசுத்த வேதாகமம்

யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். லூக்கா 14:26-27

பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு,

என்னைப் பின்பற்றக்கடவன். லூக்கா 9:23

என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெப ஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.ஆனாலும் அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும். ஆகையால் என்ன உத்தரவு சொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம் பண்ணிக்கொள்ளுங்கள். உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன். பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள்.

என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.   லூக்கா 21:10-17

GURU     

Screenshot_20200813-091023_2 (4)_edited.jpg

குறள் 261: --  kural 261

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.

 

.உற்றநோய் = தமக்கு ஏற்படுகிற துன்பம்

நோன்றல்   = பொறுத்தல்

உயிர்க்கு     = மற்ற உயிர்களுக்கு

உறுகண் செய்யாமை அற்றே     = ஏற்படும் துன்பத்தை போக்குதலே

தவத்திற் குரு   = குருவாய் வந்து உதித்து தவம் செய்த தெய்வத்தின் வேலை ஆகும்.


விளக்கம்

தனக்கு ஏற்பட்ட துன்பத்தைப் பொறுத்துக்கொண்டு, மற்ற உயிர்களின் துன்பத்தை போக்குதலே தவத்திற் குருவாகிய தெய்வத்தின் வேலை ஆகும். மனிதக் குலத்தின் துன்பத்தை அல்லது பாவங்களை தன் மேல் ஏற்றுக் கொண்டு மனித குலத்துக்கு விடுதலை கொடுத்ததுவே தவம் ஆகும்.. அப்படியே மனிதக் குலத்தின் பாவத்தை அல்லது துன்பத்தைச் சுமந்து சிலுவையில் இரத்தம் சிந்தி மனிதனைப் பாவம், சாபத்தில் இருந்து மீட்டவரே தவத்தில் குரு ஆவார்.


பரிசுத்த வேதாகமம்

மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.    நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.  ஏசாயா 53:4-5

தவத்தினால் உண்டாகும் தவம் என்ன ?

குறள் 262:  ---  kural 262

தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது

தவமுந் தவமுடையார்கு = தெய்வம் சிலுவையில் மேற்கொண்ட தவத்தைத் தானும் ஏற்றுக் கொண்டவர்களுக்கு

ஆகும் = எல்லாம் ஆகும் (இந்த உலக வாழ்க்கையில் நன்மைகள் மற்றும் பரலோக வாழ்க்கையும் கிடைக்கும்

அவமதனை = அப்படி தவத்தின் வாழ்க்கை செய்யாமல்
அஃதிலார் மேற்கொள்வது = இருப்பவர்கள் தீமையை ( நரகத்தை ) மேற்கொள்ள முடியாது.

விளக்கம்

தெய்வம் மனிதக்குலத்துக்காகச் செய்த தவத்தை அறிந்து அந்த தவத்தின் காரியங்களைத் தானும் செய்பவர்க்கு எல்லாம் ஆகும். அந்த தவத்தின் பயனைச் செய்யாதவர்கள் தீமையை ( நரகத்தை ) மேற்கொள்ள முடியாது.

நாலடியார் 4ம் அதிகாரம் 31வது படலில் ஆசிரியர் தவத்தால் தவம் செய்யாதவர்க்கு என்ன நேரிடும் என்று கூறுகிறார்.

நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல் பாடல்: 31 (அகத்தாரே)

அகத்தாரே வாழ்வாரென் றண்ணாந்து நோக்கிப்| 

புகத்தாம் பெறாஅர் புறங்கடை - பற்றி

மிகத்தாம் வருந்தி யிருப்பரே மேலைத்| 

தவத்தாற் றவஞ்செய்யா தார். (01

தெய்வம் செய்த தவத்தை பின் பற்றி தவம் செய்யாதவர்கள், இந்த பூலோக வாழ்வே இன்பம் என்று கருதி உயர்ந்தோங்கி நிற்கும் ஒரு வீட்டை அண்ணாந்து பார்த்து (இறைவன் ஏற்படுத்தி இருக்கும் பரலேக வீட்டை) அதற்கு உள்ளே போக முடியாதவர்களாகி தலை வாயிலைப் பிடித்துக் கொண்டு மிக வருந்தியிருப்பர்.

பரிசுத்த வேதாகமம்

............ என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். யோவான் 14:12

குறள் 263  ---  kural 263

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்கள் தவம்

துறந்தார்க்குத்   = உலக ஆசை இச்சைகளையும் துறந்தவர்களுக்கு

துப்புரவு வேண்டி = பரிசுத்தம் அவசியம் ( வேண்டும் ).

மறந்தார்           = பரிசுத்த வாழ்க்கையை மறந்து  வாழும் மற்றவர்கள்

கொன் மற்றை யவர்கள் தவம் = செய்ய முயற்சிக்கும் தவம் பயன் அற்றது ஆகும்.

 

விளக்கம்

தெய்வம் சிலுவையில் மேற்கொண்ட தவத்தைத் தானும் மேற்கொண்டு இந்த உலகத்தையும் மற்றும் உலக ஆசை இச்சைகளையும் துறந்தவர்களுக்குப் பரிசுத்தம் அவசியம் ( வேண்டும் ).

பரிசுத்த வாழ்க்கையை மறந்து  வாழும் மற்றவர்கள் செய்ய முயற்சிக்கும் தவம் பயன் அற்றது ஆகும்.

 

கொன் அல்லது கொல் என்றால் பயன் அற்றது என அர்த்தம்.

துப்பரவு என்றால் சுத்தம் ஆகும் உதாரானமாக தெரு சுத்தம் செய்பவர்களுக்குத் துப்பரவு தொழில் செய்பவர்கள் என அர்த்தம் ஆகும். ஆனால் உணவு எனத்தவறாக அர்த்தம் எடுக்கப்பட்டுள்ளது

 

பரிசுத்த வேதாகமம்

யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. எபிரெயர் 12:14

குறள் 264   ---  kural 264

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்

 

ஒன்னார்த் = தீமை அல்லது அழிவு செய்தாரை

தெறலும்    = கெடுத்தலும்

உவந்தாரை = தெய்வத்திற்குப் பிரியமான காரியங்கள் செய்தவர்களை

யாக்கலும் = உயர்த்தலுமாகிய
தவத்தான் = சிலுவையில் தவம் மேற்கொண்ட தெய்வம்  செய்ய நினைப்பாராயின் அது நடக்கும்.,

எண்ணின் வரும் = செய்ய நினைப்பாராயின் அது நடக்கும்.,

விளக்கம்

தீமை அல்லது அழிவு செய்தாரைக் கெடுத்தலும், தெய்வத்திற்குப் பிரியமான காரியங்கள் செய்தவர்களை உயர்த்தலுமாகிய இவ்விரண்டையும் நமக்காக சிலுவையில்தவம் மேற்கொண்ட தெய்வம்  செய்ய நினைப்பாராயின் அது நடக்கும்.,

பரிசுத்த வேதாகமம்

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமை செய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய  முகம் விரோதமாயிருக்கிறது.  1 பேதுரு 3:12

குறள் 265  --  kural 265

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்

 

வேண்டிய = வேண்டுதல்கள் அல்லது இருதயத்தின் வேண்டுதல்கள்

வேண்டி = அனைத்தையும் உலகத்தில் நிறைவேற்றுகிறார்

ஆங்கு = அங்கே பரலோகத்தின் ஆசீர்வாதங்கள் அனைத்தையும் தெய்வம் நிறைவேற்றுகிறார்
எய்தலால் செய்தவம் = தவம் செய்த தெய்வத்தின் தவத்தை விரும்பிச் செய்பவர்களுடைய

ஈண்டு முயலப் படும் = தவத்தை தாங்களும் செய்ய மனிதர்கள் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள்.

 

விளக்கம்

சிலுவையில் தவம் செய்த தெய்வத்தின் தவத்தை விரும்பிச் செய்பவர்களுடைய வேண்டுதல்கள் அல்லது இருதயத்தின் வேண்டுதல்கள் அனைத்தையும் தெய்வம் நிறைவேற்றுகிறார். பரலோக வாழ்க்கையை அளித்து ஆசீர்வதிக்கிறார். அதனால் இந்த பூமியில் அதாவது இம்மையில் தெய்வம் செய்த தவத்தை தாங்களும் செய்ய மனிதர்கள் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள்.

 

பரிசுத்த வேதாகமம்

அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்திமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.  மாற்கு 10:29-30

குறள் 266  --  kural 266

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

தவஞ்செய்வார் = தெய்வம் செய்த தவத்தை மேற்கொண்டு தவம் செய்பவர்கள்

தங்கருமஞ் செய்வார் = தங்களுக்குத் தெய்வத்தால் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்து முடிப்பவர்கள்

மற்றல்லார் = மற்றவர்கள் எல்லாம்

அவஞ்செய்வார் = கேடு செய்பவர்கள் ஆவார்கள்

ஆசையுட் பட்டு = உலக ஆசைக்குட்பட்டு.

 

விளக்கம்

தெய்வம்  சிலுவையில்செய்த தவத்தை மேற்கொண்டு தவம் செய்பவர்கள் தங்களுக்குத் தெய்வத்தால் கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து முடிப்பவர்கள். மற்றவர்கள் எல்லாம் உலக ஆசைக்குட்பட்டு கேடு செய்பவர்கள் ஆவார்கள்.

 

பரிசுத்த வேதாமம்

...............உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்  யாக்கோபு  4:4.

குறள் 267  --  kural 267

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

சுடச்சுடரும் பொன்போல் =  சுடச்சுடத் தங்கம் தன்னிடம் இருக்கும் கழிவுகள் நீங்கி  ஒளிமிகுந்து புனிதமாகுதல் போல;

ஒளிவிடுந் துன்பஞ் சுடச்சுட = அந்த துன்பத்தினாலும்  வருத்தத்தினாலும் ஞானம்  பெற்று இந்த உலகத்திற்கு ஒளியாய் இருப்பார்கள்

நோற்கிற் பவர்க்கு = தெய்வம் செய்த தவத்தைத் தானும் மேற்கொள்பவர்களுக்கு

விளக்கம்

சுடச்சுடத் தங்கம் தன்னிடம் இருக்கும் கழிவுகள் நீங்கி  ஒளிமிகுந்து புனிதமாகுதல் போல; தெய்வம் சிலுவையில்செய்த தவத்தை தானும் மேற்கொள்பவர்களுக்குத் துன்பம் வரவர அந்த துன்பத்தினால் வருத்தம் உண்டாகும் போதும், .......அந்த துன்பத்தினாலும்  வருத்தத்தினாலும் ( தங்கம் சுடச்சுட ஒளிருவது போல, ) பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைந்து தெய்வீக ஞானம்  பெற்று இந்த உலகத்திற்கு ஒளியாய் இருப்பார்கள்

பரிசுத்த வேதாகமம்

மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். யோவான் 8:12

நீதிமானுக்கு வரும் துன்பங்கள்அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.. சங்கீதம் 34:19

குறள் 268:  --  kural 268

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்

தன்னுயிர் தானறப் = தன் உயிரைத் தான் அற அதாவது தன் உயிரை  முழுமையாக தானாகச் சாகக் கொடுத்த தெய்வத்தை

பெற்றானை = தான் பெற்ற ஆணையின் படி

ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும் = மண்ணில் வாழும் மற்ற எல்லா உயிர்களும் வணங்கும்.

 

திருவள்ளுவர் தனது 268வது குறளில் தன்னுயிரை தனே முன்வந்து முழுவதுமாக அழித்து திரும்பப்பெற்றவனே தவத்திற் குரு எனக் கூறுகிறார்.

 

விளக்கம்

தான் பெற்ற ஆணையின் படி தன் உயிரைத் தான் அற அதாவது தன் உயிரை  முழுமையாக தானாகச் சாகக் கொடுத்தவரை மண்ணில் வாழும் மற்ற எல்லா உயிர்களும் வணங்கும்.

 

பெற்றானை என்பதைப் பெற்றவனை என அர்த்தம் எடுத்தால் வரும் விளக்கம்.

பெற்றவனை எனக்கூறும் போது எதைப்பெற்றார் என்ற கேள்வி எழும்புகிறது.

தன்னுயிரை தான் இல்லாமல் போகும் வரை அதாவது தான் அற்றுப்போகும் வரை சாகக்கொடுத்தவராகிய தெய்வம் தன் உயிரைத்திரும்பவும் பெற்று உயித்தெழுந்தார் என்பது தான் சரியான அர்த்தமாகும்.

 

சிலுவையில் தனது துன்பத்தைப் பொருத்துக் கொண்டு அடுத்தவர்கள் துன்பத்தை (பாவங்கள், சாபங்கள்) சிலுவையில் சிந்தப்பட்ட இரத்தத்தினால் நீக்கினார் தவத்தில் குருவானவர்.

பெற்ற ஆணை என்ன என்பதைக் கீழ்க் கண்ட பக்கத்தில் பார்க்கவும்

https://www.narrowpathlight.com/kural-268-what-is-the-command

குறள் 269  --  kural 269

கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு

கூற்றங் = மரணம் ஏற்பட்டபிறகு

குதித்தலும் கைகூடும் = மரணத்தில் இருந்து குதித்து உயிர்த்தெழுதலும் கைகூடும்,

நோற்றலின் ஆற்றல் = தெய்வம்  சிலுவையில் செய்த தவத்தைத் தானும் செய்து 

தலைப்பட் டவர்க்கு = தெய்வத்தைப் போல தானும் இந்த உலகத்தில் வாழும் போது

 

விளக்கம்

ஒருவன் தெய்வம் செய்த தவத்தைத் தானும் செய்து  தெய்வத்தைப் போல தானும் இந்த உலகத்தில் வாழும் போது மரணம் நேரிடும் போது மரணத்தில் இருந்து குதித்து எலுதலுங்கைகூடும், அதாவது மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்து நித்திய வாழ்க்கையான பரலோக வாழ்க்கையை அடைந்து தெய்வத்தோடு வாழ்வார்கள்

 

பரிசுத்த வேதாகமம்

இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; (உயிர்த்தெழுந்திருப்பார்கள்) நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.  1கொரிந்தியர் 15:51-52

குறள் 270  -- kural 270

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்

இலர் பலராகிய காரணம் = மரணத்தை ஜெயிக்கும் இரகசியத்தை அறியக்கூடிய ஞானத்தைப்  பெறாதவர்கள் பலர் ஆகியதற்குக் காரணம்

நோற்பார் சிலர் = தெய்வம் செய்த தவத்தைத் தானும் செய்ய முற்பட்டவர்கள் சிலர் ஆவார்கள்.

பலர் நோலா தவர் = தெய்வம் செய்த தவத்தின் தவத்தைச் செய்யாதவர்கள்  பலர் ஆவார்கள்.

 

விளக்கம்

மரணத்தை ஜெயிக்கும் இரகசியத்தை அறியக்கூடிய ஞானத்தைப்  பெறாதவர்கள் பலர் ஆகியதற்குக் காரணம் என்ன என்று பார்த்தால், தெய்வம் செய்த தவத்தைத் தானும் செய்ய முற்பட்டவர்கள் சிலர் ஆவார்கள்.  தெய்வம் செய்த தவத்தின் தவத்தைத் செய்யாதவர்கள்  பலர் ஆவார்கள்.

 

பரிசுத்த வேதாகமம்

இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் (நரகத்துக்கு) போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் (பரலோகத்துக்கு) போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். மத்தேயு 7:13-14

bottom of page