அருளுடைமை - பரிசுத்த ஆவியை உடமையாக்குதல்
அருள் என்பது தெய்வத்தின் வல்லமை அல்லது சக்தி என்று அழைக்கப்படுகிறது. திருவள்ளுவர் தனது வான்சிறப்பு என்ற அதிகாரத்தில் வானத்திலிருந்து நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள தெய்வத்தின் வல்லமையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.அந்த தெய்வத்தின் வல்லமை பரிசுத்த ஆவியாகும். பரிசுத்த ஆவி தெய்வத்தின் திருத்துவத்தின் ஒரு நபர் ஆவார். இதைப்பற்றி அறிய எண்குணத்தான் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
https://www.narrowpathlight.com/eight-characters-of-god
அருள் என்பது கடவுள் தரும் கொடையாகும். அருள் என்ற வார்த்தையை அரு + உள் என்று பிரித்துப் பார்க்க முடியும், அரு என்னும் தமிழ்ச் சொல்லிற்கு, உருவமற்ற, அருமையான, காணக்கிடைக்காத என்னும் அழகிய பொருட்கள் உண்டு.
காணமுடியாத ஆற்றல் ஒன்று, அதாவது தெய்வத்தின் பரிசுத்த ஆவியானவர் உள்ளம் புகுந்து களிப்படையச் செய்வதே அருள் ஆகும். அருள் வாக்கு என்பது தெய்வத்தின் ஆவியினால் நல்வார்த்தை சொல்லுவதை அருள் வாக்கு என்கிறோம்.
அந்த பரிசுத்த ஆவியாகிய அருளை தன்னுடைய உரிமைப் பொருளாக உள்ளத்தில் வைத்துக்கொள்ளுவது தான் அருளுடைமையாகும்.
திருவள்ளுவர் அருளுடைமை அத்தியாயத்தில் பரிசுத்தாவியாகிய அருளினால் வரும் ஆசீர்வாதங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்
குறள் 241 = பரிசுத்த ஆவியாகிய அருள் மூலமாக வரும் பரலோக வாழ்வே எல்லாச் செல்வங்களிலும் சிறந்தது என்று குறிப்பிடுகிறார்.
குறள் 242 = ஒருவனுக்கு நித்தியம் வரை துணை வருவது தெய்வத்தினுடைய பரிசுத்த ஆவியின் அருளே ஆகும் என்று குறிப்பிடுகிறார்
குறள் 243 = தெய்வத்தை நாடிச் சென்று அவருடைய பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்று வாழ்கின்ற ஒருவன் கீழ் உலகமாகிய நரகம் புகமாட்டான் என்று குறிப்பிடுகிறார்
குறள் 244 = தெய்வத்தின் பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்று, மற்ற மனித உயிர்களைப் பராமரிப்பவர்கள் தங்களுடைய உயிரைப்பற்றிக் கவலைப்படார்கள் என்று குறிப்பிடுகிறார்
குறள் 245 = தெய்வத்தின் பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்று, அந்த ஆவியினால் நடத்தப் படுகிறவர்களுக்கு, நரக வாழ்க்கையாகிய துன்பம் இல்லை என்று குறிப்பிடுகிறார்
குறள் 246 = தெய்வத்தின் பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் தீயவையாகிய பாவங்களைச் செய்து நடப்பார்கள் என்று குறிப்பிடுகிறார்
குறள் 247= இவ்வுலகத்தில் உலகப் பொருள் இல்லாமல் வாழ்கின்ற ஏழை எளியவர்களுக்கு பூமியின் வாழ்வு இல்பொருளாகி, பரலோக வாழ்வு உண்டு என்று குறிப்பிடுகிறார்
குறள் 248 = உலகப் பொருள் இல்லாமல் வாழ்கின்ற ஏழை எளியவர்கள் தெய்வம் குறிக்கப்பட்ட காலத்தில் பூ பூப்பது போல உயிர்த்தெழுவர்.என்று குறிப்பிடுகிறார்
குறள் 249 = தெய்வத்தின் பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்றுக் கொள்ளாத ஒருவன் தெய்வத்தை நேரில் கண்டாலும் அவரை அறிந்து கொள்ள முடியாது என்று குறிப்பிடுகிறார்
குறள் 250 = மனதில் பகை, வன்மம் இல்லாத தாழ்மையுள்ளவர்கள், மேல் உலகமாகிய வானம் அல்லது பரலோகம் செல்லுவார்கள் என்று குறிப்பிடுகிறார்.
குறள் 241: kural 241
அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள
சொற்பொருள்
அருள் செல்வம் = பரிசுத்த ஆவியாகிய அருள் மூலமாக வரும் பரலோகச் செல்வம்
செல்வத்துள் செல்வம் = அப்படிக் கிடைக்கும் அந்த பரலோக வாழ்க்கையாகிய செல்வம் இந்த உலகத்தில் நமக்குக் கிடைக்கும் செல்வத்தில் எல்லாம் பெரிய செல்வம் ஆகும்.
பொருட்செல்வம் = பரிசுத்த ஆவியாகிய அருள் மூலமாக வராத உலகத்தின் செல்வங்கள்
பூரியார் = தெய்வத்தின் அருளாகிய பரிசுத்த ஆவியை அறியாமல் நெறி தவறி வாழும் கீழ்மக்கள்
கண்ணு முள = இடத்திலும் உள்ளது
விளக்கம்
பரிசுத்த ஆவியாகிய அருள் மூலமாக வரும் பரலோகச் செல்வம் அருள் செல்வம் ஆகும், அப்படிக் கிடைக்கும் அந்த பரலோக வாழ்க்கையாகிய செல்வம் இந்த உலகத்தில் நமக்குக் கிடைக்கும் செல்வத்தில் எல்லாம் பெரிய் செல்வம் ஆகும்.
பரிசுத்த ஆவியாகிய அருள் மூலமாக வராத உலகத்தின் செல்வங்கள், தெய்வத்தின் அருளாகிய பரிசுத்த ஆவியை அறியாமல் நெறி தவறி வாழும் கீழ்மக்கள் இடத்திலும் உள்ளது
பரிசுத்த வேதாகமம்
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். 2 கொரி 5:1
இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள். சங்கீதம் 73:12
குறள் 242: kural 242
நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை
சொற்பொருள்
நல்லது ஆற்றான் = நல்ல வழியில் சென்று நல்லவற்றையே செய்யும் ஒரு சன்மார்க்கன்
நாடி அருள் ஆள்க = தெய்வத்தை நாடிச் சென்று அவருடைய பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்று வாழ்வானாக
பல ஆற்றால் தேரினும் = ஒருவன் இந்த உலகத்தை முழுவதும் ஆதாயப்படுத்தினாலும், அதாவது பலகாரியங்களை கற்று தேர்ந்தாலும், பலவழிகளை ஆராய்ந்தாலும்
அஃதே துணை = அந்த மனிதனுக்குக் கடைசி வரை அதாவது நித்தியம் வரை துணை வருவது தெய்வத்தினுடைய பரிசுத்த ஆவியின் அருளே ஆகும்.
விளக்கம்
நல்ல வழியில் சென்று நல்லவற்றையே செய்யும் ஒரு சன்மார்க்கன், தெய்வத்தை நாடிச் சென்று அவருடைய பரிசுத்த
ஆவியாகிய அருளைப் பெற்று வாழ்வானாக. அப்படிப் பரிசுத்த ஆவியின் அருளைப் பெற்றவன் நீதிமான் என்று அழைக்கப்படுவான்.
ஒருவன் இந்த உலகத்தை முழுவதும் ஆதாயப்படுத்தினாலும், அதாவது பலகாரியங்களை கற்று தேர்ந்தாலும், பலவழிகளை ஆராய்ந்தாலும் அந்த மனிதனுக்குக் கடைசி வரை அதாவது நித்தியம் வரை துணை வருவது தெய்வத்தினுடைய பரிசுத்த ஆவியின் அருளே ஆகும்.
பரிசுத்த வேதாகமம்
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? மத்தேயு 16:26
உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள். 1கொரி 6:11
குறள் 243: kural 243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்
சொற்பொருள்
அருள் சேர்ந்த = தெய்வத்தை நாடிச் சென்று அவருடைய பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்று வாழ்கின்ற
நெஞ்சினார்க்கு இல்லை = இதயத்தை உடைய ஒரு மனிதன்
இருள்சேர்ந்த = இருள் தங்கி வாசம் செய்யும்
இன்னா உலகம் புகல் = கீழ்மையான அல்லது கீழ் உலகமாகிய நரகம் புகமாட்டான் அல்லது செல்லமாட்டான்
விளக்கம்
தெய்வத்தை நாடிச் சென்று அவருடைய பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்று வாழ்கின்ற இதயத்தை உடைய ஒரு மனிதன், இருள் நிறைவாய் தங்கி வாசம் செய்யும் நரகமாகிய கீழ்மையான அல்லது கீழ் உலகமாகிய நரகம் புகமாட்டான் அல்லது அவன் பரலோகம் சென்று நித்தியக் காலமாய் வாழ்வான்.
பரிசுத்த வேதாகமம்
பரிசுத்த வேதாகமம் , மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.அதாவது நரகத்துக்குச் சென்று சேரக்கூடிய நியாயத்தீர்ப்பு (தண்டனை) இல்லை எனக் கூறுகிறது
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. ரோமர் 8:1
இன்னா : துன்பம் தீங்கு தருபவை கீழ்மையான இகழ்ச்சி வெறுப்பு
குறள் 244: kural 244
மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை
சொற்பொருள்
மன்னுயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு = தெய்வத்தை நாடிச் சென்று அவருடைய பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்று, இந்த பூமியில் உள்ள மற்ற மனித உயிர்களைப் பேணி பாதுகாத்துப் பராமரிப்பவர்களுக்கு
இல் என்ப தன்னுயிர் அஞ்சும் வினை = தன்னுடைய உயிரைப்பற்றிக் கவலைப்படும் காரியம் இல்லை அதாவது பரலோகம் சென்று சேர்வோம் என்ற நம்பிக்கையினால் மரண பயம் கிடையாது.
விளக்கம்
தெய்வத்தை நாடிச் சென்று அவருடைய பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்று, இந்தப் பூமியில் உள்ள மற்ற மனித உயிர்களைப் பேணி பாதுகாத்துப் பராமரிப்பவர்களுக்குத் தன்னுடைய உயிரைப்பற்றிக் கவலைப்படும் காரியம் இல்லை அதாவது பரலோகம் சென்று சேர்வோம் என்ற நம்பிக்கையினால் மரண பயம் கிடையாது.
பரிசுத்த வேதாகமம்
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள் மத்தேயு 10:28.
குறள் 245: kural 245
அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி
சொற் பொருள்
அல்லல் = துன்பம் அதாவது நரக வாழ்க்கையாகிய துன்பம்
அருள் ஆள்வார்க்கு இல்லை = தெய்வத்தை நாடிச் சென்று அவருடைய பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்று, அந்த ஆவியினால் நடத்தப் படுகிறவர்களுக்கு இல்லை.
வளி வழங்கு = வளிமண்டலமாகிய வானத்தில் இயங்கும்
மல்லன் மா = வலிமை நிறைந்த பெரிய
ஞாலம் கரி = உலகமாகிய பரலோகமே சான்று
விளக்கம்
தெய்வத்தை நாடிச் சென்று அவருடைய பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்று, அந்த ஆவியினால் நடத்தப் படுகிறவர்களுக்கு, துன்பம் அதாவது நரக வாழ்க்கையாகிய துன்பம் இல்லை. அப்படி நரகத்துக்குச் செல்லாதவர்கள் வளிமண்டலமாகிய வானத்தில் இருக்கும் பரலோகமாகிய வலிமை நிறைந்த பெரிய மேல் உலகத்தில் இருப்பார்கள். அவர்கள் தான் இந்தப் பரலோக வாழ்க்கையைப் பற்றி சான்று உரைப்பவர்கள் ஆவார்கள்.
அதையே வளிமண்டலமாகிய வானத்தில் இயங்கும் வலிமை நிறைந்த பெரிய உலகமாகிய பரலோகமே சான்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிசுத்த வேதாகமம்
பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம். 1தெசலோ 4:17
குறள் 246: kural 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்
சொற்பொருள்
பொருள்நீங்கிப் = பரம் பொருளாகிய இறைவனை மறந்து வாழ்பவர்கள்
பொச்சாந்தார் என்பர் = மாமிச இச்சையின் படி குற்றங்களைச் செய்பவர் ஆவார்.
அருள்நீங்கி = தெய்வத்தை நாடிச் சென்று அவருடைய பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்றுக் கொள்ளாமல்
அல்லவை = தீயவையாகிய பாவங்களைச்
செய்தொழுகுவார் = செய்து நடப்பார்கள் அதாவது வாழ்வார்கள்
விளக்கம்
பரம் பொருளாகிய இறைவனை மறந்து வாழ்பவர்கள் தங்கள் மாமிச இச்சையின் படி குற்றங்களைச் செய்பவர் ஆவார்கள். அப்படிப்பட்டவர்கள் தெய்வத்தை நாடிச் சென்று அவருடைய பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்றுக் கொள்ளாமல் தீயவையாகிய பாவங்களைச் செய்து நடப்பார்கள் அதாவது பூமியில் வாழ்வார்கள்
பரிசுத்த வேதாகமம்
பரஸ்திரீகளின் வாய் ஆழமான படுகுழி; கர்த்தருடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான் நீதிமொழிகள் 22:14
மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால், சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். ரோமர் 8:4-10
குறள் 247: kural 247
அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு
சொற்பொருள்
அருள் இல்லார்க்கு = தெய்வத்தை நாடிச் சென்று அவருடைய பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்று வாழாதவர்களுக்கு
அவ்வுலகம் இல்லை = அந்த உலகமாகிய பரலோகம் இல்லை அதாவது செல்ல முடியாது
பொருளில்லார்க்கு = இவ்வுலகத்தில் உலகப் பொருள் இல்லாமல் வாழ்பவர்களுக்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு = இந்த உலகம் நிரந்தரம் கிடையாது அவர்களுக்கு இந்த உலக வாழ்க்கை இல் பொருளாகி ஆங்கே ஒருவாழ்வு உண்டு ( ஆங்கு என்ற வார்த்தை மேல் உலகமாகிய பரலோகத்தைச் சுட்டிக் காண்பிக்கிறது )
விளக்கம்
தெய்வத்தை நாடிச் சென்று அவருடைய பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்று வாழாதவர்களுக்கு அந்த உலகமாகிய பரலோகம் இல்லை அதாவது செல்ல முடியாது அதாவது தெய்வத்தின் அருளாகிய பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றவர்களுக்கு இந்த உலகம் நிரந்தரம் இல்லை, அவர்களுக்குப் பரலோக வாழ்க்கை அளிக்கப்படும். அதாவது இந்த உலகத்தை வென்று பரலோகம் செல்வார்கள்.
இவ்வுலகத்தில் உலகப் பொருள் இல்லாமல் வாழ்பவர்களுக்கு இந்த உலகம் நிரந்தரம் கிடையாது அவர்களுக்கு இந்த உலக வாழ்க்கை இல் பொருளாகி பரலோகத்தில் ஒருவாழ்வு உண்டு (ஆங்கு என்ற வார்த்தை மேல் உலகமாகிய பரலோகத்தைச் சுட்டிக் காண்பிக்கிறது)
பரிசுத்த வேதாகமம்
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார். 1 சாமு 2:8
.............இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 21:31
அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது. ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். லூக்கா 18:24-26
குறள் 248: kural 248
பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது
சொற்பொருள்
பொருள் அற்றார் = இவ்வுலகத்தில் உலகப் பொருள் இல்லாமல் வாழ்பவர்கள்
பூப்பர் ஒருகால் = ஒரு குறிக்கப்பட்ட காலத்தில் பூ போலப் பூத்து எழுவர் அதாவது தெய்வத்தால் குறிக்கப்பட்ட காலத்தில் பூ பூப்பது போல உயிர்த்தெழுவர்.
அருள் அற்றார் = தெய்வத்தை நாடிச் சென்று அவருடைய பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்று வாழாதவர்கள்
அற்றார் = பரலோக வாழ்க்கை அற்றவர்களே அல்லது கிடைக்காதவர்கள் ஆவார்கள்
மற்றாதல் அரிது = அப்படி அருள் அற்றவர்கள் பூ பூப்பது போல உயிர்த்தெழுவது முடியாத காரியம் ஆகும்.
விளக்கம்
இவ்வுலகத்தில் உலகப் பொருள் இல்லாமல் வாழ்பவர்கள் ஒரு குறிக்கப்பட்ட காலத்தில் பூ போலப் பூத்து எழுவர் அதாவது தெய்வத்தால் குறிக்கப்பட்ட காலத்தில் பூ பூப்பது போல உயிர்த்தெழுவர். தெய்வத்தை நாடிச் சென்று அவருடைய பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்று வாழாதவர்கள் பரலோக வாழ்க்கை அற்றவர்களே அல்லது கிடைக்காதவர்கள் ஆவார்கள் அப்படி அருள் அற்றவர்கள் பூ பூப்பது போல உயிர்த்தெழுவது முடியாத காரியம் ஆகும்.
( பூப்பது என்பது உயிர்த்தெழுதலைக் குறிக்கிறது. திருவள்ளுவர் தனது 3 வது குறளில் பூ மலர்ந்து உயிர்த்தெழுதலைப் பற்றிக் கூறுகிறார் )
திருக்குறள் 3 - Thirukkural 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்.
சொற்பொருள்
மலர் = மலர்ச்சியுற்று / உயிர்த்து (Full-blown flower, blossom)
மிசை = வானம்
micai n. cf. மீது. 1. Eminence,elevation; உயர்ச்சி. (சூடா.) 2. Elevated place;மேலிடம்.3.mound; மேடு. 4. Sky; வானம்.
ஏகினான்= சென்று இருப்பவனாகிய
மாண் அடி =மாட்சிமிக்க பாதங்கள்
நிலமசை = நிலம் + இசை
விளக்கம்
மலர்ந்து அல்லது உயிர்த்து வானம் (HEAVEN) சென்று இருப்பவனாகிய கடவுளின் மாண்பு மிக்க பாதங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் பூமியில் இன்பமான வாழ்வையும், பரலோக வீட்டின் நித்தியப் பேரின்ப வாழ்வையும் பெறுவர்.
பரிசுத்த வேதாகமம்
.............இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 21:31
ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக் கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். லூக்கா 16:19-23
குறள் 249: kural 249
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்
சொற்பொருள்
தெருளாதான் மெய்ப்பொருள் = மெய்ப் பொருளாகிய தெய்வத்தைப் பற்றிய அறிவின் தெளிவு இல்லாதவன் ஒருவன்
கண்டு அற்றால் = தெய்வம் அவன் முன்பாக நேரில் தோன்றினாலும் அவன் கண்ட காட்சி வீண் காட்சியாய் அமையும். அதாவது அவன் தெய்வத்தைக் கண்டாலும் அவர் தான் தெய்வம் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியாது
தேரின் அருளாதான் செய்யும் அறம் = தெய்வம் அருளிய பரிசுத்தாவியின் அருளால் ஆட்கொள்ளப்படாதவன் செய்யும் அறச்செயல்களை ஆராய்ந்து பார்த்தால்
விளக்கம்
தெய்வம் அருளிய பரிசுத்தாவியின் அருளால் ஆட்கொள்ளப்படாதவன் செய்யும் அறச்செயல்களை ஆராய்ந்து பார்த்தால், மெய்ப் பொருளாகிய தெய்வத்தைப் பற்றிய அறிவின் தெளிவு இல்லாத ஒருவன் முன்பாகத் தெய்வம் நேரில் தோன்றினாலும் அவன் கண்ட காட்சி வீண் காட்சியாய் அமையும் அதாவது அவன் தெய்வத்தைக் கண்டாலும் அவர் தான் தெய்வம் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியாது.
பரிசுத்த வேதாகமம்
அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்து கொள்ளாத வர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். மத்தேயு 13:13-14
குறள் 250: kural 250
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேற் செல்லு மிடத்து
சொற்பொருள்
வலியார் முன் = வலியார் என்பது வன்மம் என்ற தீராப்பகை தங்களுடைய உள்ளங்களில் உள்ளவர்கள் ஆவார்கள், அப்படிப்பட்டவர்கள் முன்பு நிற்கிற ஒருவன்
தன்னை நினைக்கதான் = தன்னுடைய நிலைமையை எண்ணிப்பார்த்து அதாவது தன்னுடைய உள்ளத்தில் மறைந்து இருக்கும் கெட்ட குணங்களாகிய வன்மம், தீராப்பகை, பழிவாங்குதல் ஆகியவற்றைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்து, வலியார் போலத் தான் மாறாமல்
தன்னின் மெலியார் = தன்னைவிட மனதில் தாழ்மையுள்ளவர்கள், ( மெலியார் என்றால் வலியிலார் ஆகும், வன்மம்.தீராப்பகை தங்கள் மனதில் இல்லாதவர்கள் )
மேல் செல்லும் இடத்து = மேல் உலகமாகிய வானம் (பரலோகம்) செல்லுவதை ஆராய்ந்து பார்த்து தானும் அவர்களைப் போலத் தாழ்மையாக மாறவேண்டும்.
விளக்கம்
வலியார் என்பது வன்மம் என்ற தீராப்பகை தங்களுடைய உள்ளங்களில் உள்ளவர்கள் ஆவார்கள், அப்படிப்பட்டவர்கள் முன்பு நிற்கிற ஒருவன் தன்னுடைய நிலைமையை எண்ணிப்பார்த்து அதாவது தன்னுடைய உள்ளத்தில் மறைந்து இருக்கும் கெட்ட குணங்களாகிய பகை, வன்மம், தீராப்பகை, பழிவாங்குதல் ஆகியவற்றைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்து, வலியார் போலத் தான் மாறாமல், தன்னைவிட மனதில் பகை, வன்மம் இல்லாத தாழ்மையுள்ளவர்கள், மேல் உலகமாகிய வானம் (பரலோகம்) செல்லுவதை ஆராய்ந்து பார்த்து தானும் அவர்களைப் போலத் தாழ்மையாக மாறி பரலோகம் செல்ல நினைக்க வேண்டும்.
இந்த குறளில் மேல் செல்லும் இடத்து என்பதை எந்த திருக்குறள் விளக்கங்களும் சரியாக அர்த்தம் கொள்ளவில்லை, மேல் செல்லும் இடத்து என்பது மேலே உள்ள நகரமாகிய பரலோகத்தைக் காண்பிக்கிறது.
பரிசுத்த வேதாகமம்
விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். கலாத்தியர் 5:20-21
அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. . யாக் 4:6
---------------------------------------------------------------------------
வலி : வன்மை காண்க: வலாற்காரம் நறுவிலி அகங்காரம் வல்லெழுத்து பற்றிரும்பு தொல்லை நோவு ஒலி சூள் வஞ்சகம் இழுக்கை இசிவுநோய்வகை வலிமைமிக்கவன் கோடு குரங்கு
மெலியார் : வலியிலார் தமிழ் தமிழ் அகராதி (1985)
மேல் : மேலிடம் அதிகப்படி வானம் மேற்கு தலை தலைமை மேன்மை உயர்ந்தோர் உடம்பு இடம் மேலெழுந்தவாரியானது முன்புள்ளது பின்புள்ளது அதிகமாக முன் பற்றி அப்பால் இனி ஒரு முன்னொட்டு ஏழனுருபு
guru