Heaven and Earth வானாகி மண்ணாகி
8.105.02 எட்டாம் திருமுறை மாணிக்க வாசகர் திருவாசகம் பாடல் 15
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்றவரை கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
வானாகி = வானமாகிய பரலோகத்தில் இருந்தவரான தெய்வம்
மண்ணாகி = இந்தப் பூமியை உடையவராய்
வளியாகி = காற்று போன்றவர் அதாவது ஆவியானவர் ( வளி = காற்று )
ஒளியாகி = வெளிச்சம் ( ஜோதி ) ஆகி அதாவது இந்தப் பூமிக்கு ஒளியாக வந்தவர்
ஊனாகி = மனித உடம்பு உடையவராய் அதாவது மனிதனாகப் பிறந்தவர்
உயிராகி = நித்திய ஜீவன் ஆகி அதாவது நித்திய வாழ்க்கையாகிய பரலோக வாழ்க்கை அளிப்பவர்.
உண்மையுமாய் = அவரே சத்தியம் ஆனவர்
இன்மையுமாய் = இல்லாமை ஆகி அதாவது மரித்தவராகி
கோனாகி = அரசனாகி அல்லது தலைவன் ஆகி
யான் எனது என்றவரை = நான். எனது என்று கூறும் சுய நலக்காரரை எல்லோருக்கும்
கூத்தாட்டு வானாகி = இந்தப் பூமியில் ஒவ்வொருவருக்கும் ஒரு வேசம் கொடுத்து ஆட்டிப் படைத்து தன்னுடைய திருவிளையாடலை நிறைவேற்றுவானாகி
நின்றாயை = உயிர்த்தெழுந்து நிலைத்து நின்றாயே
என்சொல்லி வாழ்த்துவனே = உம்மை நான் என்ன சொல்லி வாழ்த்துவேன்,
விளக்கம்
வானமாகிய பரலோகத்தைத் தனது இருப்பிடமாகக் கொண்டு இருந்தவரான தெய்வம், இந்தப் பூமியில் வந்து பிறந்து, நம்மைப் போல இந்த மண்ணுக்குச் சொந்தம் உடையவராய் வந்து பிறந்தார். அவர் ஆவியான தேவன், அவர் இந்தப் பூமிக்கு ஒளியாக வந்தவர், அவர் கன்னி மரியாளின் மகனாக மனித உடம்பு உடையவராய் மனிதனாகப் பிறந்தவர். அவரே நித்திய ஜீவன் கொடுப்பவர் அதாவது நித்திய வாழ்க்கையாகிய பரலோக வாழ்க்கை அளிப்பவர், அவரே சத்தியம் ஆனவர், அவர் சிலுவையில் மரித்து இல்லாமை ஆனவர்.
அவர் இந்தப் பூமியில் இருக்கும் எல்லா மனிதர்க்கும் அரசனாகி அல்லது தலைவன் ஆகி, நான். எனது என்று கூறும் சுய நலக்காரரை எல்லோருக்கும் இந்த பூமியில் ஒவ்வொருவருக்கும் ஒரு வேசம் கொடுத்து ஆட்டிப் படைத்து தன்னுடைய திருவிளையாடலை நிறைவேற்றுகிறவர். ஆவார்.. அவர் உயிர்த்தெழுந்து நிலைத்து நின்றார், அவரை நாம் என்ன சொல்லி வாழ்த்துவோம் அல்லது துதிப்போம்.,
பரிசுத்த வேதாகமத்தில் இருந்து விளக்கம்
வானாகி
1) கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார். சங்கீதம் 33:13
2) கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது? ஏசாயா 66:1
மண்ணாகி
3) தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். லூக்கா 2:10-12
வளியாகி
4) தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். யோவான் 4:24 கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. 2 கொரி 3:17
ஒளியாகி
5) என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன். யோவான்12:46
ஊனாகி
6) தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. 1 யோவான் 4:2
உயிராகி உண்மையுமாய்
7) அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 14:6
இன்மையுமாய்
8) கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார். ரோமர் 14:9
கோனாகி
9) அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சி கொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். யோவான் 18:37
யான் எனது என்றவரை கூத்தாட்டு வானாகி
10) அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. யாக்கோபு 4:6
நின்றாயை
11) அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான். மத்தேயு 28:6-7
என்சொல்லி வாழ்த்துவனே
12) என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. சங்கீதம் 103:1-2
Comments