top of page
Search

JegaJothi - ஜெகஜோதி

Writer: j rajamohanj rajamohan

JegaJothi - ஜெகஜோதி

 

அகத்தியர் அவர்கள் தன்னுடைய அகத்தியர் ஞானம் 30ல் 23 வது பாடலில் தெய்வத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது “வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகி”   என்று பாடுகிறார்.

 

இந்த உலகத்திற்கு அதாவது ஜெகத்துக்கு ஒளியாய் வந்த ஒரே தெய்வத்தையே வணங்குவாயாக என்ற அர்த்தத்துடன் ஆரம்பிக்கும் கீழ்க்கண்ட அகத்தியர் அவர்களின் பாடல் இந்த உலகத்தில் மனிதக் குமாரனாகப் பிறந்து சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து மூன்றாம் நாள் உயிர்த்து பரலோகம் சென்றவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி அழகாகக் கூறுகிறது.

 

அகத்தியர் ஞானம் 30ல் 23 வது பாடல்

 

வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகி

மானிலத்தை ஒரு நொடியில் வகுத்தே மண்ணில்

குணமான மனிதக்ரையும் படைத்த பின் 

குவலயத்திற்றானு தித்துக்குருவாய் வந்து

கனமான சமுசாரம் ஒன்றிலாமல்

சன்யாசி போலிருந்து தவத்தைக்காட்டி

அன்பான சித்தர்களை இருத்திப்போட்டு

அகண்டதலஞ்சென்றவரை யண்டுவாயே.

 

சொற்பொருள்

வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகி = இந்த உலகத்துக்கு ஒளியாய் வந்து பிறந்த ஒரே தெய்வத்தை வணங்குவாயாக

 

மானிலத்தை ஒரு நொடியில் வகுத்தே = மானிலம் என்றால் உலகம் ஆகும், இந்த உலகத்தை ஒரு நொடியில் உண்டாக்கிய பின்பு

 

மண்ணில் குணமான மனிதரையும் படைத்த = இந்தப் பூமியின் மண்ணினால் நல்ல குணமான மனிதனைப் படைத்து 

(அதாவது மனிதன் படைக்கப்பட்ட போது பரிசுத்தம் உள்ளவனாகவே இருந்தான், பிறகு சாப்பிடக் கூடாது என்ற பழத்தை சாப்பிட்டதால் பாவ மனிதனாக மாறிவிட்டான்,)

 

பின் குவலயத்தில் தானும் உதித்துக் = குவலயம் என்பது பூமியாகும், (  தாமரை என்று அர்த்தம் எடுப்பது தவறு ) அதற்குப் பின்பு இந்தப் பூமியில் தானும் வந்து பிறந்து

 

குருவாய் வந்து    = இந்தப் பூமிக்கு மனிதக் குமாரனாக வந்த தெய்வம் மனிதனை பாவமாகிய இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச்செல்லும் குருவாகவே வந்தார்


கனமான சமுசாரம் ஒன்றில்லாமல் சன்னியாசி போலிருந்து = அப்படி இந்தப் பூமிக்கு வந்த தெய்வம் பாரமான சம்சார வாழ்க்கையை வாழாமல் அதாவது சம்சாரம் ஒன்றும் இல்லாமல் சன்னியாசி போலவே வாழ்ந்தார்.

 

தவத்தைக்காட்டி = தெய்வம் செய்த தவம் என்பது இரத்தம் சிந்தியது ஆகும், அவர் மனிதக்குலத்தை மீட்கச் சிலுவையில் இரத்தம் சிந்தினார். அதையே தவத்தைக்காட்டி என்று குறிப்பிடப்படுகிறது. (தெய்வம் செய்த தவம் என்பது சிலுவையில் இரத்தம் சிந்தியதே ஆகும், மரத்தடியில் அமர்ந்து தியானம் பண்ணுவது தவம் என்று அர்த்தம் ஆகாது )


அன்பான சித்தர்களை இருத்திப்போட்டு = சித்தர்கள் என்றால் சீசர்கள் ஆகும். தனக்கு அன்பான 12 சீசர்களையும் மற்றும் அனேக சீசர்களையும் இந்த உலகத்தில் அவரைப் பற்றி அறிவிக்க அல்லது எழுத விட்டு வைத்து


அகண்டதலஞ்சென்றவரை யண்டுவாயே. = அகண்ட தலம் என்ற மிகப் பெரிய இடமாகிய பரலோகத்திற்கு உயிர்த்தெழுந்து சென்றவரான தெய்வத்தை மட்டும் அண்டிக் கொள்வாயாக என்பதே அர்த்தம் ஆகும்.

 

விளக்கம்

இந்த உலகத்துக்கு ஒளியாய் வந்து பிறந்த ஒரே தெய்வத்தை வணங்குவாயாக அவர் இந்த உலகத்தை ஒரு நொடியில் உண்டாக்கிய பின்பு, இந்தப் பூமியின் மண்ணினால் நல்ல குணமான மனிதனைப் படைத்தார். அதற்குப் பின்பு இந்தப் பூமியில் தானும் வந்து பிறந்து, இந்தப் பூமிக்கு மனிதக் குமாரனாக வந்த தெய்வம் மனிதனைப் பாவமாகிய இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச்செல்லும் குருவாக வந்தார்.  அப்படி இந்தப் பூமிக்கு வந்த தெய்வம் பாரமான சம்சார வாழ்க்கையை வாழாமல் அதாவது சம்சாரம் ஒன்றும் இல்லாமல் சன்னியாசி போலவே வாழ்ந்தார். அவர் குணமாகப் படைக்கப்பட்ட மனிதன் பாவத்தில் விழுந்ததால் அவர் சிலுவையில் இரத்தம் சிந்தி தவத்தைக்காட்டி மனிதனை மீட்டுக் கொண்டார். (தெய்வம் செய்த தவம் என்பது இரத்தம் சிந்தியது ஆகும், அவர் மனிதக்குலத்தை மீட்கச் சிலுவையில் இரத்தம் சிந்தினார். அதையே தவத்தைக்காட்டி என்று குறிப்பிடப்படுகிறது. தெய்வம் செய்த தவம் என்பது சிலுவையில் இரத்தம் சிந்தியதே ஆகும், ( மரத்தடியில் அமர்ந்து தியானம் பண்ணுவது தவம் என்று அர்த்தம் ஆகாது ) பின்பு  தனக்கு அன்பான 12 சீசர்களையும் மற்றும் அனேக சீசர்களையும் இந்த உலகத்தில் அவரைப் பற்றி அறிவிக்க அல்லது எழுத விட்டு வைத்து  அகண்ட தலம் என்ற மிகப் பெரிய இடமாகிய பரலோகத்துக்கு  உயிர்த்தெழுந்து சென்றவரான தெய்வத்தை மட்டும் அண்டிக் கொள்வாயாக என்பதே அர்த்தம் ஆகும்.


ஜெகஜோதி - light of the world
ஜெகஜோதி

தெளிவான விளக்கம்

1) வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகி

இந்த உலகத்துக்கு ஒளியாய் வந்து பிறந்த ஒரே தெய்வத்தை வணங்குவாயாக என்பது இந்த வரியின் அர்த்தம், இந்த உலகத்துக்கு அதாவது உலக மக்களுக்கு ஒளியாய் வந்த தெய்வம் இயேசு கிறிஸ்து ஆவார். அவர் மக்களை இரட்சிக்கவே இந்த உலகத்துக்கு வந்தார், இருளில் இருக்கும் ஜனங்கள் வெளிச்சத்தைக் கண்டார்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. அவர் ஒருவரே இந்தப் பூமியில் வந்து பிறந்த மனிதக் குமாரன் ஆவார். அவர் இந்தப் பூமியில் இருக்கும் போது இந்த உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார். அப்படிப்பட்ட ஒரே தெய்வத்தை வணங்க வேண்டும்

 

பரிசுத்த வேதாகமம்.

மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். யோவான் 8:12

என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான்  உலகத்தில்  ஒளியாக வந்தேன்  யோவான் 12;46.

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின்  திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா  தீர்க்கதரிசியினால்  உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. மத்தேயு 4:15-16    


2) மானிலத்தை ஒரு நொடியில் வகுத்தே

இந்தப் பூமியை ஒரு நொடியில் படைத்தார் அதாவது ஒரு வார்த்தையினால் உண்டாக்கினார். இந்தப் பூமியும் மற்ற எல்லாம் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும்  அவராலேயல்லாமல் (இயேசு)  உண்டாகவில்லை என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது

 

பரிசுத்த வேதாகமம்

 

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.  ஆதி 1:1

சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும்  அவராலேயல்லாமல்  உண்டாகவில்லை.  யோவான் 1:3

கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய  வாயின்  சுவாசத்தினால்  அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.  சங்கீதம் 33:6

 

3) மண்ணில் குணமான மனிதரையும் படைத்த பின் 

தெய்வம் மனிதனை இந்தப் பூமியின் மண்ணினால் உண்டாக்கி அவனுக்குத் தன்னுடைய சுவாசத்தை அவனுக்கு ஆவி அல்லது சுவாசமாகக் கொடுத்தார், அவன் படைக்கப்பட்ட போது நல்ல குணத்துடன் தான் படைக்கப் பட்டார்கள். அப்படிப் படைக்கப்பட்ட மனிதன் தெய்வத்தால் உண்ணக்கூடாது என்று சொன்ன பழத்தை சாப்பிட்டத்தால் பாவம் இந்தப் பூமியில் வந்தது.

 

திருவுந்தியார்-உய்யவந்ததேவநாயனார் 41வது பாடலில் பரலோகம் சென்று சேரக்கூடிய முதல் மனிதனாகிய முதலுக்கே மோகக் கொடி படர்ந்து அத்தி பழுத்தது என்று வேகமாகச் சொல்லு. அப்பழம் உண்ணாதே என்று வேகமாகச் சொல்லு எனக் கூறுகிறார்.

41 வது பாடல்

முத்தி முதலுக்கே மோகக் கொடிபடர்ந்                                                  

 தத்தி பழுத்ததென் றுந்தீபற                                                           

 அப்பழ முண்ணாதே யுந்தீபற                                                                       

 முதற் கொடிக்கே

 

விளக்கம்

முதல் மனிதானாகிய் ஆதாம் பரலோகம் செல்வதற்காகப் படைக்கப்பட்டவன் அவன் தெய்வம் சாப்பிடக் கூடாது என்று கூறிய பழத்தின் மேல் ஆசைப்பட்டு அதாவது அந்தப் பழத்தின் மேல் மோகக் கொடி ( ஆசைக் கொடி ) படரவிட்டு அந்த பழத்தைச் சாப்பிட்ட படியால் ஆதாம் மற்றும் இந்தப் பூமியில் பாவமாகிய அத்தி பழுத்தது (பாவம் உண்டானது) என்று கூறுகிறார்.

 

பரிசுத்த வேதாகமம்

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.  ஆதி 2:7


4) குவலயத்திற்றானு தித்துக்குருவாய் வந்து

குவலயம் என்பது நாம் வாழும் பூமியாகும், அனேகர் இதன் அர்த்தத்தைத் தாமரை என்று எடுக்கிறார்கள், தாமரை என அர்த்தம் எடுத்தால் இந்தப் பாடலில் இந்த வரியின் அர்த்தம் வேறுபடும்.

தெய்வம் இந்தப் பூமியில் மனிதக் குமாரனாக வந்து பிறந்து தன்னைத்தானே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்து மனிதக்குலத்தைப் பாவமாகிய இருளில் இருந்து வெளிச்சத்துக்கு அழைத்துச் செல்லும் குருவாக வந்து உதித்தார்.

 

ஔவையார்                                                                                                                ஔவையார் தனது விநாயகர் அகவலில் கோடாயுதத்தால் கொடுவினை களைந்த தெய்வத்தை குரு என அழைக்கிறார். அதற்கு அர்த்தம் கோடு ஆயுதத்தில் நமக்காகப் பலியாகி நமது கொடு வினைகளைக் களைந்த தெய்வம் ஆகும். ( மரத்தால் ஆன கொலைக் கருவியாகிய சிலுவையில் பலியான தெய்வமே குருவாக அழைக்கப்படுகிறார். )

 

குருவடி வாகிக் குவலயந் தன்னில்   

திருவடி வைத்துத் திறமிது பொருளென  

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25   

 

இதைப்பற்றி மேலும் அறிய குரு யார் ? என்ற பக்கத்தைப் பார்க்கவும். https://www.narrowpathlight.com/who-is-guru


பரிசுத்த வேதாகமம்

இயேசு கிறிஸ்து குருவைப் பற்றிக் குறிப்பிடும் போது கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு குருவாயிருக்கிறார். மற்றவர்களை குரு என்று அழைக்கப்படாதிருங்கள் எனக்கூறுகிறார்.

கிறிஸ்து என்றால் இரத்தம் சிந்தி மீட்டவர் என அர்த்தம்.

 

நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். மத்தேயு 23:10


5) கனமான சமுசாரம் ஒன்றில்லாமல்

இயேசு கிறிஸ்து இந்தப் பூமியில் வாழ்ந்த போது மனைவி இல்லாத ஒரு சன்னியாச வாழ்க்கை வாழ்ந்தார். அவர் நசரேய விரதம் உள்ளவராக இருந்தார்.

 

பரிசுத்த வேதாகமம்

அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில்  அறையப்பட்ட  நசரேயனாகிய  இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், அவர் இங்கேயில்லை; இதோ, அவரை  வைத்த இடம்.  மாற்கு 16:6

அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: மனைவியைப் பற்றிப்  புருஷனுடைய  காரியம்  இப்படியிருந்தால், விவாகம் பண்ணுகிறது நல்லதல்ல என்றார்கள். அதற்கு அவர்: வரம்  பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்தப் வசனத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.  தாயின்  வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால்  அண்ணகர் களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோக ராஜ்யத்தினிமித்தம்  தங்களை  அண்ணகர்களாக்கிக் கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்.  மத்தேயு 19:10-12


6) சன்யாசி போலிருந்து தவத்தைக்காட்டி

இயேசு கிறிஸ்து இந்தப் பூமியில் இருக்கும் வரை சன்னியாசியாக வாழ்ந்து , நசரேய விரதம் உள்ளவராக இருந்தார். அவர் உலக மக்களுக்கு இரட்சிப்பு கொடுப்பதற்க்காகச் சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார். அவர் சிலுவையில் தன்னுடைய கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி மரித்தார். அதையே தவத்தைக்காட்டி என்று கூறப்பட்டுள்ளது.

 

தவம் என்பது அமர்ந்து தியானம் செய்வது கிடையாது, இரத்தம் சிந்தி மீட்பதுவே தவம் ஆகும். ஒவ்வொரு தாயும் தன்னுடைய பிள்ளைகளை இரத்தம் சிந்திப் பெற்று எடுக்கிறாள் அது தவம் இருந்து பெற்ற தாயின் தவம் ஆகும்.


தாயின் தவம் என்ன ?

தவம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை அறிய வேண்டும் என்றால் தாயின் தவத்தைப் பார்க்கவேண்டும்.

 நமது தமிழ் நாட்டில் தாய்மார்கள் தங்களது பிள்ளைகளைக் கொஞ்சும் போது தவம் இருந்து பெற்ற பிள்ளைகள் எனக் கூறுவதை நாம் அறிவோம். தாயின் தவம் என்பது தியானம் இருந்து பிள்ளை பெற்றது கிடையாது. ஒரு தாய்  தனது  பிள்ளையை  இரத்தத்தில் பெற்று எடுக்கிறாள். அதாவது  தனது  இரத்ததைச்  சிந்தி  ஒர்  உயிரைப்  பெற்று எடுக்கிறாள்.

தாய் என்பவள் தன்னுயிரைக் கொடுத்து பிள்ளையின் உயிரைக் காப்பாற்றுகிறாள், அதனால் தான் பிள்ளைப் பேறு காலத்தைப் பிரசவக் காலம் என அழைக்கிறோம்.  மருத்துவத் துறையில் பல கண்டு பிடிப்புகள் இல்லாத சமயத்தில் பிரசவக் காலத்தில் இரு உயிர்களையும் காப்பாற்றுவது கடினமான காரியம் எனவே தான் ஒரு பிறவி மற்றும் ஒரு சாவு என்பதைச் சுருக்கி பிரசவம் என் அழைத்தார்கள்.

எனவே தன் உயிரைத் தந்து  வேறு ஒரு உயிரைக் காப்பதுவே தவம் ஆகும். 

இதைப்பற்றி அறிய தவம் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.


7) அன்பான சித்தர்களை இருத்திப்போட்டு

அவர் இந்தப் பூமியில் இருந்து பரலோகம் செல்லும் போது தனது சீசர்களை உலகத்தில் விட்டு சென்றார், நமது தமிழ் நாட்டில் இயேசு கிறிஸ்துவின் சீசர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இயேசு கிறிஸ்துவுக்கு பிரதான சீசர்கள் பன்னிரெண்டு பேர் ஆவர்கள், அது போக எழுபது சீசர்கள் இருந்தார்கள் அதுவும் போக அனேக சீசர்கள் இருந்தார்கள், அவர் உயிர்த்தெழுந்து பரலோகம் சென்ற பிறகு, அவருடைய சீசர்கள் உலகம் முழுவதும் பரவிச் சென்று அவரைப் பற்றி நற்செய்தி சொல்லவும் ஆரம்பித்தார்கள்.

இயேசு கிறிஸ்துவின் பிரதான சீசர்களில் ஒருவரான தோமா தமிழ் நாட்டுக்கு வந்து அவரைப் பற்றிக் கூறி அனேகரை அவரது சீசர்கள் ஆக்கினார். அவர்களுக்குச் சித்தர்கள் என்று பெயர்.

இந்தப் பன்னிரெண்டு என்பது சீசர்களைக் காண்பிக்கிறது. அதே பன்னிரெண்டு என்பது சைவ, வைணவச் சித்தாந்தங்களிலும் இருக்கிறதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

பன்னிரெண்டு சீசர்கள், பன்னிரெண்டு சைவ சித்தாந்த திருமுறைகள், பன்னிரெண்டு சைவ சித்தாந்தச் சூத்திரங்கள், பன்னிரெண்டு வைணவ ஆழ்வார்கள், பன்னிரெண்டு ராசிகள், பன்னிரெண்டு கற்கள், பன்னிரெண்டு முத்துக்கள்.

 

பரிசுத்த வேதாகமம்

பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.  லூக்கா 6:13 இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.  லூக்கா 10:1  மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள்.   லூக்கா 7:11 பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ  சிருஷ்டிக்கும்  சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். மாற்கு 16:15


8) அகண்டதலஞ்சென்றவரை யண்டுவாயே.

அகண்டதளம் என்றால்  பரந்து விரிந்த இடம் ஆகும் அதாவது இந்தப் பூமியில் இல்லாத ஒரு பெரிய இடம் ஆகும், அதையே பரலோகம், சொர்க்கம், வைகுண்டம், கைலாசம் என்று அழைக்கிறோம்.

உயிர்த்தெழுந்து பரலோகம் சென்றவரையே அண்டிக்கொள்வாயாக என்பது தான் அதன் விளக்கம். அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.


பரிசுத்த வேதாகமம்

குமாரன் ( இயேசு கிறிஸ்து )  கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை  அண்டிக்கொள்ளுகிற  யாவரும் பாக்கியவான்கள். சங்கீதம் 2:12;

இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர  எடுத்துக் கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.  அப்போ 1:9

அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு  எடுத்துக் கொள்ளப்பட்டார்.  லூக்கா 24:51

 

 

 
 
 

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.
bottom of page